இந்தப் பதிவு ஆங்கிலத்தில் பேச வேகமாக கற்றுக்கொள்வது எவ்வாறு என்பது பற்றியது, அவ்வாறின்றி இது 10 அல்லது 30 நாட்களில் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவது பற்றிய பதிவு அல்ல. 10 அல்லது 30 நாட்களில் சரளமாக பேசுவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒரு விடயம் என்றே கூற வேண்டும்.
நீங்கள் கதைக்கும் ஆங்கிலத்தை விரைவுபடுத்த நீங்கள் பின்பற்ற வேண்டிய சில படிமுறைகள் இங்கே தரப்பட்டுள்ளன.
நீங்கள் ஏன் ஆங்கிலம் கற்க விரும்புகிறீர்கள் அல்லது நீங்கள் ஏன் ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதை சரியாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் பேசும் ஆங்கிலத்தை மேம்படுத்தக் கூடிய ஒரு உந்துதலைக் கண்டறிவது எப்படி? மற்றும் ஆங்கில மொழியில் சிறந்து விளங்குவது என்பது உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதைப் பற்றி நீங்களே சிந்திக்க ஆரம்பியுங்கள்.
ஒரு குறிப்பிட்ட இலக்கை மனதில் வைத்து உங்கள் கற்றலை தொடருங்கள்
நீங்கள் கற்றலுடன் வேகமாக முன்னோக்கிய செல்ல வேண்டுமென்றால் ஒரு குறிக்கோளை மனதில் நிறுத்திக்கொள்வது மிகவும் அவசியமானதாகும்.
ஒவ்வொருவருக்கும் ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்வதில் வெவ்வேறு குறிக்கோள்கள் இருக்கும்.
நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச விரும்பும்புவதற்கான காரணம் ஒரு தொழிலுக்கான நேர்முகப் பரீட்சை ஏனினின், ஒரு நேர்முகப் பரீட்சையில் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய கேள்விகளைப் பொருத்து உங்கள் பேசும் திறமையை கட்டமைத்துக்கொள்ளலாம். உதாரணமாக, நேர்முகப் பரீட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கான உங்கள் பதில்களை சுருக்கமாகவும், தெளிவாகவும் மாற்றியமைக்க முயற்சி செய்யலாம். இதற்காக நீங்கள் பயிற்சியிலும் ஈடுபட முடியும்.
ஆங்கிலத்தில் பேசுவதற்கான ஆழமான ஒரு சூழலை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்.
ஒரு மொழி பூர்வீகமாக பேசப்படும் நாட்டில் வாழும் பிற மொழிகளைப் பேசும் மக்கள் அவர்கள் வாழும் நாட்டில் பூர்வீகமாக பேசப்படும் மொழியை மிகவும் வேகமாக கற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அந்த மொழியில் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை. அவர்களைச் சுற்றியுள்ள எல்லோரும் அந்த நாட்டில் பூர்வீகமாகப் பேசப்படும் மொழியையே பேசுகிறார்கள்.
மேலே கூறிய விடயத்தை பொறுத்தமட்டில் ஒரு நாட்டில் பூர்வீகமாகப் பேசப்படும் மொழியைப் பேசுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் இதுபோன்ற ஒரு அனுபவம் உங்கள் தாய் நாட்டில் உங்கள் சொந்த இடத்தில் ஏற்படுவதில்லை. அவ்வாறான ஒரு சூழலை ஏற்படுத்துவதும் சற்று கடினமாக இருக்கும்.
நிறையவே பேசுங்கள்
இதுவே அனைத்திலும் முக்கியமான விடயம்.
நீரில் குதிக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது
நீச்சல் கையேட்டைப் படிப்பதற்கும், நீச்சல் குளத்தில் உள்ளவர்கள் எவ்வாறு நீச்சலடிக்கின்றனர் என்பதை ஆராய்வதற்கு செலவிடும் நேரத்தை விட நீச்சல் பயிற்சிக்காக கூடிய நேரம் செலவழிப்பதன் மூலம் விரைவில் நீச்சல் கற்றுக்கொள்ள முடியும். நீச்சல் என்பது ஒரு தனித் திறமை, அதை பயிற்சி செய்வதன் மூலமே நீங்கள் அதைக் கற்றுக்கொள்ள முடிகிறது.
இதைப் போலவே, பேசுவது என்பதும் ஒரு திறமையாகும். அதை பயிற்சி செய்வதன் மூலம் மட்டுமே நீங்கள் சரளமாகவும், விரைவாகவும் பேசக் கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் ஒரு நாளில் பல மணி நேரங்களை ஆங்கிலம் கற்பதில் செலவழிக்கலாம், ஆனால் நீங்கள் பேசுவதற்கு போதிய பயிற்சியை மேற்கொள்ளவில்லை என்றால் உங்களால் ஆங்கிலத்தில் பேசுவது என்பது எட்டாக்கனியாகவே இருக்கும்.
ஆங்கிலத்தில் தொடர்ந்து பேசுவது, பேசப் பழகுவது என்பவை உங்கள் ஆங்கிலப் பேச்சுத் திறனில் பாரிய ஒரு மாற்றத்தை உருவாக்கும்.
யாருடன் பேசுவது?
ஆங்கிலத்தில் பேசு ஆர்வமுடையவர்களுக்கு ஏற்படும் மற்றுமொரு சவால் யாருடன் ஆங்கிலத்தில் பேசுவது என்பதாகும்.
உண்மையில் நீங்கள் விரும்பியவர்களுடன் ஆங்கிலத்தில் பேச முடியும். உங்கள் துணை, உங்கள் நண்பர்கள், உங்கள் உறவினர்கள், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் என யாருடன் வேண்டுமானானாலும் ஆங்கிலத்தில் கதைக்க முடியும். ஒருவேளை கேட்பவர்களுக்கு ஆங்கிலம் புரியவில்லை எனினும் நீங்கள் கூறும் விடயத்தை புரிந்துகொள்ள கட்டாயம் முயற்சி செய்வார்கள்.
தாராளமாக பிழைவிடுங்கள், பிழைகளை சரிசெய்துகொள்ளுங்கள்.
ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கும் பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினை இதுவாகும். ஆங்கிலத்தில் பேசும் போது ஏதாவது பிழை ஏற்படும் எனும் பயமும், அதனால் அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதில் காட்டும் தயக்கமும் அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை ஒரு மந்தமான நிலைக்கு இட்டுச்செல்கிறது.
ஒரு ஆய்வின் படி ஆங்கிலத்தில் கதைப்பவர்கள் ஒரு முறை விடும் பிழையினை அவர்களுக்குத் தெரியப்படுத்தினால் அல்லது அவர்கள் புரிந்துகொண்டால், மீண்டும் அந்தப் பிழையினை அவர்கள் செய்வதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவாகவே உள்ளது.
ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ளுங்கள் எந்த ஒரு மொழி கற்பவரும், ஒரு புதிய மொழியை பேச ஆரம்பிப்பவர்களும் பேசும் போது பல பிழைகளை விடுகின்றனர். ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் தமிழ் பேசும் போது எத்தனை பிழைகள் ஏற்படுகின்றன. ஆனால் அதை நாங்கள் திருப்பி செய்வதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும். நாமும் ஆங்கிலத்தை புதிதாகக் கற்கிறோம் எனும் மனநிலையில் இருந்து பேச வேண்டும். பிழைகள் இல்லாமல் பேசுவதற்கு அது எமது தாய்மொழியல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.