அதிகமானவர்களுக்கு நல்ல ஆங்கில அறிவு இருந்தபோதிலும், இன்னொருவர் ஆங்கிலத்தில் பேசும் போது சரிவர புரிந்துகொள்ள முடிவதில்லை. முக்கியமாக ஆங்கில உரைகள், ஆங்கில செய்தி, ஆங்கில திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் என அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் செவியுறும் எதனையும் அதிகமானவர்களால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும்.
இங்கே உங்களால் ஆங்கிலத்தில் மற்றவர்கள் பேசுவதை புரிந்துகொள்ள முடியாமைக்கான காரணங்கள் என்னவென்றும் அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் பார்க்கலாம்.
பொதுவாக ஆங்கிலம் கற்கும் போது எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்கிறோம், ஆனால் உண்மையில் ஆங்கிலத்தில் ஒருவர் பேசுவதை புரிந்துகொள்ளும் அளவிற்கு ஆங்கிலத்தில் செவிமடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ள தவறிவிடுகிறோம். உங்களால் ஆங்கிலத்தில் பேச முடியாமல் இருப்பதற்கும் இது ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது.
ஒருவர் கதைக்கும் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருப்பது ஏன்?
01. வார்த்தைகளால் உச்சரிக்கப்படும் ஆங்கிலம் எப்போதும் எழுதப்படும் ஆங்கிலம் அல்ல.
ஆங்கிலத்தில் பேசும் போது சொற்கள் உச்சரிக்கப்படும் விதம் எப்போதும் அவை எழுதப்படும் விதமாக அமைவதில்லை.
உதாரணமாக LOVE எனும் ஆங்கிலச் சொல்லை எடுத்துக்கொள்வோம். LOVE எனும் சொல் இறுதியில் ஆங்கில எழுத்துக்கள் 'VE' ஆகியவற்றுடன் முடிவடைந்தாலும், அது பேசப்படும் போது 'F' ஒலியுடனேயே நிறைவடைகிறது. ஆங்கிலப் பேச்சுக்களுக்கு அதிகளவில் செவிமடுத்திருந்தால், உங்களுக்கும் இதுபோன்ற சொற்களின் வித்தியாசங்கள் புரிந்திருக்கும். இல்லாவிடின் ஆங்கிலப் பேச்சுக்களில் உள்ள சொற்களைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும்.
ஆங்கில உச்சரிப்புகள், மற்றும் ஆங்கிலத்தில் செவிமடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ள உதவிபுரியும் நோக்கில் எமது YouTube சேனலிலும் முடிந்தவகையில் சில காணொளிகளை வழங்கி வருகிறோம். அவற்றை நீங்கள் கீழே பார்வையிடலாம்.
2. ஒரு ஆங்கில எழுத்தின் உச்சரிப்பு அது இடம்பெறும் சொற்களைப் பொருத்து மாறுபடும்.
உதாரணமாக:
1. Umbrella எனும் சொல்லின் முதல் ஆங்கில எழுத்து U 'அ' ஒலியையும், Uniform எனும் சொல்லில் 'யு' ஒலியையும் தருகிறது.
2. Egg எனும் சொல்லின் முதல் ஆங்கில எழுத்து E 'எ' ஒலியையும், Easy எனும் சொல்லில் 'ஈ' ஒலியையும் தருகிறது.,
3. India எனும் சொல்லின் முதல் ஆங்கில எழுத்து I 'இ' ஒலியையும், Ice எனும் சொல்லில் 'ஐ' ஒலியையும் தருகிறது.
மேலே உள்ள சொற்களை நீங்கள் உச்சரிக்கும் போதே இதனை புரிந்துகொள்வீர்கள்.
3. தெளிவற்ற உச்சரிப்பு.
ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் பேசும் போது அவர்களின் ஆங்கில உச்சரிப்புக்கள் தெளிவற்றவை போல் இருக்கும். ஆனால் இதன் உண்மையான காரணம் தெளிவற்ற உச்சரிப்பு அல்ல. ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்று கதைப்பவர்கள் போலன்றி ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டு கதைப்பவர்கள் ஆங்கில சொற்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து சற்று வித்தியாசமாக சுருக்கிக் கதைப்பார்கள். இதையே நீங்கள் தெளிவற்ற உச்சரிப்பைப் போன்று உணர்வீர்கள்.
உதாரணமாக:
Do you want to eat? என்பதை D'ya wanna eat? என்று கூறுவார்கள்.
அதேபோன்று
I am going to go now என்பதை am gonna go now என்று கூறுவார்கள்.
4. ஆங்கிலத்தில் செவிமடுத்தல் குறைவு
ஒரு புதிய மொழியை பேசுவதற்கு அந்த மொழிக்கு செவிமடுத்தல் மிக முக்கியமானதாகும். சற்று சிந்தியுங்கள், நீங்கள் எப்படி தமிழ் மொழியில் கதைக்க ஆரம்பித்தீர்கள்? நீங்கள் குழந்தையாக இருக்கும் போது முதலில் உங்கள் தாய்க்கும் பின்னர் ஏனையோருக்கும் செவிமடுக்க ஆரம்பித்தீர்கள், அதன் விளைவாக தமிழ் மொழியை நன்றாகக் கதைக்கப் பழகிக்கொண்டீர்கள்.
இதேபோன்று நீங்கள் ஆங்கில மொழியையயும் கதைக்க வேண்டுமெனில், ஆங்கிலத்தில் கதைப்பவர்களுக்குக் கட்டாயம் செவிமடுக்க வேண்டும். அதற்காக நீங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆங்கிலப் பேச்சுகளுக்கு செவிமடுக்க வேண்டும் என்றில்லை. நீங்கள் தற்போது உள்ள சூழலில் உங்களால் முடிந்தவரையில் ஆங்கிலத்தில் மற்றவர்கள் பேசும் விடயங்களுக்கோ அல்லது ஆங்கில செய்திகளுக்கோ செவிமடுப்பதன் ஊடாக குறிப்பிடத்தக்க அளவில் ஆங்கிலத்தில் உங்கள் பேச்சுத் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும்.
மேலே YouTube தளத்தில் உள்ள எமது காணொளிகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். ஆங்கிலத்தில் செவிமடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள இக்காணொளிகளும் உங்களுக்கு பயனுள்ளவையாக அமையும் என நம்புகிறோம்.
இக்கட்டுரை உங்களுக்குப் பயனுடையதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும் இதனை பகிர்ந்துகொள்ளுங்கள்.